8 அறிவியல் நீர் மதிப்பீடு வினா விடைகள்

 

நீர்

மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. எந்த வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?

அ) 0º

ஆ) 100º

இ) 102º

ஈ) 98ºC

விடை: அ) 0º


2. நீரில் கார்பன் டை ஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது

அ) குறைவான அழுத்தத்தில்

ஆ) அதிகமான அழுத்தத்தில்

இ) வெப்பநிலை உயர்வால்

ஈ) ஏதுமில்லை

விடை:ஆ) அதிகமான அழுத்தத்தில்


3. நீரினை மின்னாற்பகுக்கும்போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு

அ) ஆக்சிஜன் 

ஆ) ஹைட்ரஜன்

இ) நைட்ரஜன் 

ஈ) கார்பன் டைஆக்சைடு

விடை: ஆ) ஹைட்ரஜன்


4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?

அ) ஈயம் 

ஆ) படிகாரம்

இ) ஆக்சிஜன் 

ஈ) குளோரின்

விடை: அ) ஈயம் 


5. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை

அ) சல்பேட்டுகள் 

ஆ) தூசுக்கள்

இ) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்

ஈ) கரைந்துள்ள பிற பொருட்கள் 

விடை: அ) சல்பேட்டுகள் 


II. கோடிட்ட இடத்தை நிரப்புக


1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் __________

விடை:சுவையற்றது


2. நீரின் கொதிநிலை __________

விடை: 100º


3. நீரின் தற்காலிகக் கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.

விடை:கொதிக்கவைத்தல்


4. நீர் _________________ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினைப் பெற்றிருக்கும்.

விடை:4ºC


5. ஏற்றம் ________ செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.

விடை:


III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.


1. கழிவுநீரினை நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

விடை: சரி


2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை: தவறு. 

கடல் நீரில் உள்ள உப்புகள் விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாது. அவற்றில் அதிகமாக சோடியம் குளோரைடு உப்பு மட்டுமே இருக்கும்.


3. வேதிஉரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து

நீர் மாசுபடுகிது.

விடை: சரி


4. நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்பநிலையிலும் மாறாமல் இருக்கும்.

விடை: தவறு.

வெவ்வேறு வெப்ப நிலைகளில் நீர் வெவ்வேறு அடர்த்தியைக் கொண்டிருக்கும்.


5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.

விடை:தவறு.

மென் நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.


IV. பொருத்துக.


சர்வ கரைப்பான்

நீர் மாசுபடுத்தி

கடினநீர்

கிருமிகளைக் கொல்லுதல்

கொதித்தல் 

ஓசோனேற்றம்

நுண்ணுயிர் நீக்கம்

நீர்

கழிவுநீர்

வயிற்று உபாதைகள்


விடை:


சர்வ கரைப்பான்

நீர் 

கடினநீர்

வயிற்று உபாதைகள்

கொதித்தல் 

கிருமிகளைக் கொல்லுதல் 

நுண்ணுயிர் நீக்கம்

ஓசோனேற்றம்

கழிவுநீர்

நீர் மாசுபடுத்தி


V. கீழ்க்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக.


1. வீழ்படிவுத் தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்.


  • கழிவுகளை வீழ்படியச் செய்ய, வீழ்படிதலை துரிதப்படுத்துவதற்காக பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேர்க்கப்படுகிறது. இந்நிகழ்வினை ஏற்றம் (loading) என்கிறோம். 

  • பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலைத் துரிதப்படுத்துகிறது


2. நீர் ஒரு சர்வ கரைப்பான்.


  • கரைப்பான் என்பது பிற பொருள்களை (கரைபொருள்) கரைக்கக்கூடிய பொருளாகும். 

  • பிற திரவங்களுடன் ஒப்பிடுகையில் தண்ணீருக்கு மட்டுமே அநேக பொருள்களை கரைக்கும் தனித்துவமான பண்பு உள்ளது.

  • எனவே, இது சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.


3. பனிக்கட்டி நீரில் மிதத்தல்.


  • பனிக்கட்டியானது நீரைவிட இலேசானது. 

  • பனிக்கட்டியின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியை விட குறைவு

  • எனவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.


4. நீர்வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.


  • நீர்வாழ் விலங்கினங்கள் நீரிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, செவுள் அல்லது  தோல்  வழியே நீரை வெளியேற்றுகின்றன. 

  • நீரில் ஆக்சிஜன் கரைந்திருப்பதாலேயே நீர்வாழ் விலங்கினங்கள் நீரில் வாழ முடிகிறது.


5. கடல் நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.


  • ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35 கிராம் சாதாரண உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு கரைந்துள்ளது. அது உவர் நீர் எனப்படும். 

  • இது பருகுவதற்கு உகந்ததல்லாத நீர் எனப்படுகிறது.


6. பாத்திரங்களைத் தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.


  • கடின நீர் பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்களின் மீது கடினமான படிவுகளை உருவாக்கி அவற்றைச் சேதப்படுத்துகிறது. 

  • எனவே,பாத்திரங்களைத் தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.




VI. கீழ்க்காண்பவற்றை வரையறு.


1. உருகுநிலை

எந்த வெப்பநிலையில் ஒரு திடப்பொருள் உருகி திரவப் பொருளாக மாறுகின்றதோ அதுவே அந்த திடப்பொருளின் உருகுநிலை எனப்படும். (பனிக்கட்டியின் உருகு நிலை 0ºC )


2. கொதிநிலை

எந்த வெப்பநிலையில் ஒரு திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதுவே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படும்.(நீரின் கொதி நிலை 100ºC)


3. தன்வெப்ப ஏற்புத்திறன்

ஒரு பொருளின் ஓர் அலகு வெப்பநிலையை 1°C ஆக உயர்த்த தேவையான வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.


4. ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்

பனிக்கட்டியை நீராக மாற்றத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.


5. பருக உகந்த நீர்

மனித நுகர்வுக்கு தகுதியான நீரே பருக உகந்த நீர் எனப்படும்.ஒவ்வொரு லிட்டர் பருக உகந்த நீரும் 1 முதல் 2 கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புக்களையும் கொண்டுள்ளது


VII. சுருக்கமாக விடையளி.


1. நீரினை மின்னாற்பகுக்கும்போது நேர்மின் மற்றும் எதிர்மின் வாயில் வெளியேறும்

வாயுக்களின் பெயர் மற்றும் விகிதம் என்ன?


  • நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கூறுகள் உள்ளன. அதன் மூலக்கூறு வாய்ப்பாடு H2O ஆகும்.

  • மின்னாற்பகுப்பின் மூலம் நீர் இரு வேறு வாயுக்களாகப் பிரிக்கப்படுகிறது.

  • மின்னாற்பகுப்பின்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 2:1 என்ற விகிதத்தில் பெறப்படுகின்றன.

  • கேத்தோடில் ஹைட்ரஜன் வாயுவும் ஆனோடில் ஆக்சிஜன் வாயுவும் சேகரிக்கப்படுகிறது.


2. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைட்டின் முக்கியத்துவத்தைக் கூறுக.


நீரில் நைட்ரஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு தவிர ஆக்சிஜனும் கரைந்துள்ளது. பின்வரும் காரணங்களுக்காக நீரில் காற்று கரைந்திருப்பது அவசியமாகும்.

•  உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரில் காற்று கலந்திருப்பது அவசியமாகும். 

• மீன்கள் நீரிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, செவுள் வழியே நீரை வெளியேற்றுகின்றன. நீரில் ஆக்சிஜன் கரைந்திருப்பதாலேயே மீன்களால்  நீரில் வாழ முடிகிறது. 

• ஒளிச்சேர்க்கைக்கு நீர்வாழ் தாவரங்கள் நீரில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துகின்றன. 

•  நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடு சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட்டை உருவாக்குகிறது. நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கால்சியம் பை கார்பனேட்டிலிருந்து கால்சியம் கார்பனேட்டைப் பிரித்தெடுத்து தங்களது மேல் ஓடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.


3. நீரின் தற்காலிக மற்றும் நிரந்திர கடினத்தன்மைக்கான காரணிகள் யாவை?


தற்காலிக கடினத்தன்மை

தற்காலிக கடினத்தன்மை கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது. 

நிரந்தர கடினத்தன்மை:

நிரந்தர கடினத்தன்மையானது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.


4. நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - விவரி.


நீரானது 100°C வெப்பநிலையை அடையும் போது அது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகிறது. 

எனினும், நீரின் வெப்பநிலை 100°C க்கு மேல் உயராது. ஏனெனில், கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் கொதிக்கும் நீரின் இயற்பியல் நிலையை மட்டுமே மாற்றுகிறது. 

இந்த வெப்பஆற்றல் நீராவியினுள் சேமிக்கப்படுகிறது. எனவே, இது நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படுகிறது. 

நீராவியானது மிகவும் அதிக ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன் மதிப்பு 540 கலோரி/கிராம் அல்லது 2268 ஜூல்/ கிராம் ஆகும்.


5. நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள் யாவை?


கொதிக்க வைத்தல்: 

சூடுபடுத்தப் படும்பொழுது கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் சிதைவடைந்து கரையாத கால்சியம் கார்பனேட் உருவாகிறது.


சலவை சோடாவைச் சேர்த்தல்:

சலவை சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.


அயனி பரிமாற்றம்:

நீரினை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன.


வாலை வடித்தல்:

இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலைவடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் தூய்மையான நீராகும்.


VIII. விரிவாக விடையளி.


1. சுத்திகரிப்பு ஆலைகளில் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?


நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், நீரைச் சுத்திகரிக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

இந்த வழிமுறைகளைப் பற்றி கீழே காண்போம்.


வீழ்படிவாக்குதல்:

  • ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து பெறப்படும் நீரானது பெரிய கலன்களில் சேகரிக்கப்ப டுகிறது. 

  • பிறகு கழிவுகளை வீழ்படியச் செய்வதற்காக எந்தவித அசைவுமின்றி அது கலன்களில் அப்படியே நிலைநிறுத்தப்படுகிறது. 

  • இதனால், மாசுகள் கொள்கலனின் அடிப்பகுதியில் படிகின்றன. 

  • சில நேரங்களில் வீழ்படிதலை துரிதப்படுத்துவதற்கு பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேர்க்கப்படுகிறது. இந்நிகழ்வினை ஏற்றம் (loading) என்கிறோம். 

  • பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலைத் துரிதப்படுத்துகிறது.


வடிகட்டுதல்:

  • வீழ்படிவுக் கொள்கலனிலிருந்து நீரானது வடிகட்டுதல் கலனுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. 

  • வடிகட்டுதல் கலனின் அமைப்பானது மணல், கூழாங்கல், கல்கரி மற்றும் கான்கிரிட் அடுக்குகளால் ஆனது. 

  • நீரானது இந்த அடுக்குகளின் வழியாக உள் இறங்கும்பொழுது, நீரில் கலந்துள்ள மாசுக்கள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. 


நுண்ணியிர் நீக்கம்:

 கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்குவதற்காக வடிகட்டப்பட்ட நீரானது வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்முறை நுண்ணுயிர் நீக்கம் எனப்படும். இந்நிகழ்விற்காக குளோரின் மற்றும் ஓசோன் வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 


குளோரினேற்றம் :

வடிகட்டுதல் கலனிலிருந்து பெறப்பட்ட நீரானது நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுவதற்காக குளோரின் கலனிற்கு அனுப்பப்படுகிறது. போதுமான அளவு குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம் எனப்படுகிறது. 


ஓசோனேற்றம்:

கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் கலனிற்குள் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர். 


காற்றேற்றம்:

நீரின் மீது காற்று மற்றும் சூரிய ஒளி விழுமாறு செய்வதன் மூலமாகவும் நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம். காற்றிலிருக்கும் ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி ஆகியவை நீரிலுள்ள கிருமிகளை அழிக்கின்றன. காற்றினைச் செலுத்துவன் மூலம் கிருமிகளை நீக்கம் செய்யும் முறை காற்றேற்றம் எனப்படும்.


2. நீரின் நிரந்தர கடினத்தன்மை என்றால் என்ன? இத்தன்மை எவ்வாறு நீக்கப்படுகிறது?


  • கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நீரில் கரைந்திருப்பதே நீரின் கடினத்தன்மைக்குக் காரணமாகும்.

  • நிரந்தர கடினத்தன்மையானது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.

நிரந்தர கடினத்தன்மையினை நீக்கும் முறை  சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


சலவை சோடாவைச் சேர்த்தல்:


சலவை சோடாவைச் சேர்ப்பதன் மூலம் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கலாம். சலவை சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது. இந்த கரையாத கார்பனேட்டுகள் வடிகட்டுதல் மூலம் நீக்கப்ப டுகின்றன.


வாலை வடித்தல்:


தற்காலிக கடினத்தன்மை மற்றும் நிரந்தர கடினத்தன்மையை வடிகட்டுதல் முறையில் அகற்றலாம். 

இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலைவடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் தூய்மையான நீராகும்.


3. மின்னாற்பகுத்தல் என்றால் என்ன? நீரை மின்னாற்பகுக்கும் முறையை விளக்குக.


மின்னாற்பகுத்தல்:

நீரின் வழியே மின்னாற்றலைக் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜனாகப் (O2) பிரிகிறது. மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல் எனப்படும்.


நீரை மின்னாற்பகுத்தல்:

  • நீரை மின்னாற்பகுத்தலை ஒரு சோதனையின் உதவியுடன் காண முடியும்.

  • இந்த சோதனை அமைப்பில் இரண்டு கார்பன் தண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு கண்ணாடிக் குடுவையில் மூன்றில் ஒரு பங்கு நீர் நிரப்பப்படுகிறது. 

  • நேர்சுமை கொண்ட கார்பன் தண்டு ஆனோடாகவும், எதிர்சுமை கொண்ட கார்பன் தண்டு கேத்தோடாகவும் செயல்படுகிறது. 

  • இரண்டு சோதனைக் குழாய்கள் படத்தில் உள்ளவாறு கார்பன் தண்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. 

  • மின் தண்டுகள் மின்கலனுடன் இணைக்கப்பட்டு, சோதனைக் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட வாயுவால் நிரப்பப்படும் வரை மின்னாற்றல் செலுத்தப்படுகிறது. 

  • நிரப்பப்பட்ட வாயுக்களை எரியும் தீக்குச்சியைக் கொண்டு சோதிக்கும் போது, சோதனைக் குழாயின் அருகில் தீக்குச்சி வந்ததும்.. 

  • கேத்தோடிலுள்ள வாயு ’பாப்’ என்ற ஒலியுடன் அனைவதை நாம் காண முடியும். இத்தகைய ஓசையை ஹைட்ரஜன் வாயுவே எழுப்பும் என்பதால், சோதனை குழாயின் உள்ளே இருப்பது ஹைட்ரஜன் வாயுவே என்பது உறுதியாகிறது. 

  • ஆனோடினருகில் கொண்டு செல்லப்படும் தீக்குச்சி மேலும் பிரகாசமாக எரிகிறது, எரியும் வாயு ஆக்சிஜன் வாயு என்பதை இது உறுதி செய்கிறது. 

  • இந்த சோதனையின் மூலம் நீர், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்களால் ஆனது என்பது உறுதியாகிறது. 

  • ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் விகிதம் 2:1 ஆகும். எனவே, கேத்தோடில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு இரண்டு பங்கு ஹைட்ரஜன் வாயுவிற்கும் ஆனோடில் ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு சேகரிக்கப்படுகிறது.


4. பல்வேறு நிலைகளில் நீர் மாசுபடுதலை விளக்குக


மனித செயல்களின் விளைவாக நீர்நிலைகள் மாசுபாடு அடைவதையே நீர் மாசுபடுதல் என்கிறோம்.

தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருள்கள், கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகள் நீர் மூலங்களைச் சென்றடைவதாலேயே நீர் மாசுபாடு அடைகிறது. 

இதன் காரணமாக நீரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. 

இது நீரின் தரத்தைக் குறைத்து அதனை உயிரினங்களுக்கு நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகிறது. 

மாசுபட்ட நீரைப் பருகுவதால் மனிதர்களின் உடல் நலத்திற்கு கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன.


அ. வீட்டு உபயோக டிடர்ஜெண்டுகள்:

  • நீர் மாசுபாட்டிற்கு வீட்டில் உபயோகப்படுத்தப்படும் டிடர்ஜெண்டுகள் ஒரு முக்கியக் காரணம் ஆகும். செயற்கை (மக்க இயலாத) டிடர்ஜெண்டுகள் எளிதில் சிதைவடையாத வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளன. 

  • அவை மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. 

  • டிடர்ஜெண்ட்டுகளின் அதிகப்படியான பயன்பாடு மீன் மற்றும் பிற உயிரினங்களை பெருமளவில் பாதிக்கிறது. 

  • சில ஷாம்பு, ஃபேஸ் வாஷ், ஷவர் ஜெல் மற்றும் பற்பசை ஆகியவற்றில் நுண்ணிய நெகிழித்துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மைக்ரோபீட்ஸ் (microbeads) என்று அழைக்கப்படுகின்றன. 

  • அழுத்தித்தேய்த்தல், சருமத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் பற்களை மெருகூட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அவை சேர்க்கப்படுகின்றன. 

  • மைக்ரோபீட்ஸ் கொண்ட தயாரிப்புகளை நாம் பயன்படுத்தும்போது, அவை நீர் வடிகாலில் சென்று நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. 

  • மீன் மற்றும் பிற விலங்குகள் அவற்றை தற்செயலாக உண்பதன் மூலம் பாதிப்படைகின்றன.


ஆ. கழிவுநீர்: 

  • வீட்டுப் பயன்பாட்டிற்குப் பிறகு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரை கழிவுநீர் என்று அழைக்கிறோம். 

  • நதி, ஏரி போன்ற நீர்நிலைகளில் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். 

  • சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் உணவுக் கழிவுகளில் இருக்கும் கரிமப் பொருட்கள், வீட்டுப் பொருள்களில் இருக்கும் வேதிப் பொருட்கள் போன்றவை உள்ளன. 

  • மேலும், இவை நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கக்கூடும்.


இ. வீட்டு உபயோக திட மற்றும் நெகிழிக்கழிவுகள்:

  • நெகிழி உள்ளிட்ட திடக் கழிவுகள் ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் வெளியேற்றப்படுகின்றன அல்லது அவற்றைச் சென்றடைகின்றன. 

  • நெகிழிகள் வடிகாலை அடிப்பதன் மூலம் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரவுகின்றன. 

  • நீர்நிலைகளில் உள்ள கழிவுகள் நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன.

ஈ. விவசாயம்:

  • விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மழைநீரில் கரைந்து ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் பாய்கின்றன. 

  • இதனால், நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் போன்ற ஊட்டச் சத்துக்களோடு சில நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களும் நீர்நிலைகளில் சேர்கின்றன. இதற்கு யூட்ரோபிகேசன் என்று பெயர்.

  • இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.


உ. தொழிற்சாலைக் கழிவு:

  • பல தொழிற்சாலைகள் ஈயம், பாதரசம், சயனைடுகள், காட்மியம் பன்ற நச்சுக் கழிவுகளை வெளியிடுகின்றன. 

  • சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் வெளியிடப்படும் இக்கழிவுகள் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன.


ஊ. எண்ணெய்க் கசிவுகள்: 

  • கடல் படுக்கைக்குக் கீழே பெரிய அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பெறுவதற்காக பெருங்கடல்களில் துளைகள் இடப்படுவதன் மூலம் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது. 

  • நீரின் மேற்பரப்பில் மிதக்கும் எண்ணெய் சூரிய ஒளியைத் தடுக்கிறது, மேலும், நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவைக் குறைத்து கடல் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

எ. வெப்பத்தினால் மாசடைதல்:

  • அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் குளிரூட்டும் தேவைகளுக்காக அதிக அளவு நீர் பயன்படுத்தப்படுகிறது.

  • அவ்வாறு பயன்படுத்தப்பட்ட நீர் மீண்டும் நதி அல்லது பிற நீர் ஆதாரங்களில் அதிகளவு வெப்பநிலையுடனும், சில வேதி பொருட்களுடனும் வெளியேற்றப்படுகிறது. 

  • இது நீரின் வெப்பநிலையை அதிகரித்து, நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது, இதனால், நீர்வாழ் உயிரினங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்