8 - அறிவியல்- பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை- வினா-விடைகள்
பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. மண்ணில் விதைகளை இடும் செயல்முறையின் பெயர்____________ .
அ. உழுதல்
ஆ. விதைத்தல்
இ. பயிர்ப்பெருக்கம்
ஈ. பயிர்ச் சுழற்சி
விடை: ஆ. விதைத்தல்
2. மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை ____________.
அ. நீர்ப் பாசனம்
ஆ. பரப்பு நீர்ப் பாசனம்
இ. தெளிப்பு நீர்ப் பாசனம்
ஈ. சொட்டு நீர்ப் பாசனம்
விடை: ஆ. பரப்பு நீர்ப் பாசனம்
3. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
அ. உயிரி - பூச்சிக் கொல்லிகள்
ஆ. உயிரி - உரங்கள்
இ. மண்புழுக்கள்
ஈ. வேம்பு இலைகள்
விடை: அ. உயிரி - பூச்சிக் கொல்லிகள்
4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?
அ. விதை நேர்த்தி செய்தல்
ஆ. இலைத் தெளிப்பு
இ. மண் நேர்த்தி செய்தல்
ஈ. உயிரி – கொன்றுண்ணிகள்
விடை: அ. விதை நேர்த்தி செய்தல்
5. பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?
அ. பசுவின் சாணம்
ஆ. பசுவின் சிறுநீர்
இ. தயிர்
ஈ. சர்க்கரை
விடை: ஈ. சர்க்கரை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில் நடவு செய்யும் முறை_____________________ ஆகும்.
விடை:பயிர் நடவு செய்தல்
2. விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் __________________.
விடை: களைகள்
3. களைகளைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப்பொருளின் பெயர் ________________.
விடை: களைக்கொல்லிகள்
4. ________________விதைகள் தனது தனித்துவப்பண்புகளை அதன் வழித்தோன்றலுக்குக்கடத்துகின்றன.
விடை: பாரம்பரிய
5. _________________மையங்கள் ICAR மற்றும்விவசாயிகளுக்கிடையேயான இறுதி
இணைப்பாகச் செயல்படுகின்றன.
விடை: க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா
6. அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர்வகைகள் _____________ஆல்
உருவாக்கப்பட்டுள்ளன.
விடை: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)
III. பொருத்துக.
உயிரி – பூச்சிக் கொல்லிகள் - பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
உயிரி -கொன்றுண்ணிகள் - வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது
உயிரி - உரங்கள் - மண் வளத்தை மேம்படுத்தல்
உயிரி – சுட்டிக்காட்டிகள் - சூழ்நிலையின் தரம்
உயிரி – பூச்சி விரட்டிகள் - வேப்பிலைகள்
IV. சுருக்கமாக விடையளி.
1. உழுதல் - வரையறு.
பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப் பொருள்கள் கிடைக்குமாறு மண்ணை மேலும் கீழும் புரட்டி, தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.
2. விதைத்தலின் வகைகளைப் பட்டியலிடுக.
அ. கைகளால் விதைத்தல்
ஆ. விதைக்கும் கருவி
இ. ஊன்றுதல்
3. இலைப்பரப்பில் தெளித்தல் என்றால் என்ன?
இலையில் தெளிப்பு எனப்படுவது திரவ நிலை உரங்களைதாவர இலைகளில் நேரடியாகச் செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் தொழில்நுட்பம் ஆகும
4. கிரிஷ் விஞ்ஞான் கேந்திரா பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும். இந்த மையங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்கும் (ICAR) விவசாயிகளுக்கும் இடையேயான இணைப்பாகச் செயல்படுகின்றன. வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்புகளை உள்ளூர்களில் நடைமுறைப் படுத்துதல் இவற்றின் நோக்கமாகும்.
முதல் KVK 1974ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது.
5. உயிரி - சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதருக்கு இவை எவ்வாறு உதவுகின்றன?
சுற்றுச் சூழலின் நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி - சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன
6. களையெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன. களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும்.
7. பயிர்ச்சுழற்சி என்றால் என்ன?
ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடும் முறை பயிர்ச் சுழற்சி எனப்படும்.
8. பசுந்தழை உரம் என்றால் என்ன?
V. விரிவாக விடையளி.
1. வேளாண் செயல்முறைகளை விவரி.
மண்ணைத் தயார் படுத்துதல்
பயிர்ப்பெருக்கத்திற்கான செயல்முறைகளில் மிக முக்கியமானபகுதி மண்ணின் மேல்அடுக்கினை தளர்வடையச் செய்வதாகும். உழுதல், சமப்படுத்துதல், அடி உரமிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
விதை விதைத்தல்
விதைத்தல் என்பது விதைகளை மண்ணில் ஊன்றச் செய்யும் செயலாகும். விதைக்கப்படும் விதைகள் தரமிக்கவையாக கவனமுடன் தேர்வு செய்யப்பட வேண்டும்.
கைகளால் விதைத்தல், இயந்திர விதைப்பு மற்றும் ஊன்றுதல் ஆகியவை விதை விதைத்தலின் முக்கிய வகைகள் ஆகும்.
உரமிடுதல்
தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப் பொருள்கள் உரங்கள் எனப்படும்.
நீர்ப்பாசனம்
தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நீர் அவசியமானதாகும்.தாவரங்கள் வேர்த்தொகுப்பின் உதவியால் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும்.கிணறுகள், குழாய்க் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், அணைகள் மற்றும் கால்வாய்கள் நீர்ப் பாசனத்தின் பலவகை ஆதார வளங்களாகும். தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம் ஆகியவை நவீன நீர்ப் பாசன முறைகள் ஆகும்.
களையெடுத்தல்
விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம்.இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன. களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும்.
அறுவடை செய்தல்
விளைந்த பயிர்களை வெட்டிச் சேகரிக்கும் செயல் அறுவடை எனப்படும். முதிர்ச்சியடைந்த பயிர்களைச் சேகரிக்கும் செயல்முறை அறுவடை செய்தல் எனப்படும். அறுவடை என்பது தானியங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் தூற்றுதலையும் உள்ளடக்கியது.
சேமித்தல்
பயிர்கள் பருவகாலத்தில்உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. எனவே, முறையானசேமிப்பு மூலம் உற்பத்தியான உணவுப் பொருள்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
2. நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விளக்குக.
▶தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நீர் அவசியமான தாகும்.
▶சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும்.
▶நீர் பாய்ச்சும் கால அளவும், எண்ணிக்கையும் பயிருக்குப் பயிரும், மண்ணிற்கு மண்ணும் மற்றும் பருவநிலைக்கு பருவநிலையும் வேறுபடுகின்றன.
▶குறைவான செலவில், சரியான நேரத்தில் போதுமான அளவில் பயிர்களுக்கு சீராக நீரளிப்பதே மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் எனப்படும்.
▶இரண்டு முறைகளில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.
அ. பாரம்பரிய முறைகள்
ஆ. நவீன முறைகள்
அ. பாரம்பரிய முறைகள்
●விவசாயிகள், கிணற்றிலிருந்து அல்லது நீர்க்கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சுகின்றனர்.
●பல்வேறு நீர் ஆதாரங்களிலிருந்து நீரை மேலே கொண்டுவர விசையியக்கக் கருவிகள் (Pump) பயன்படுகின்றன. டீசல், உயிர்வாயு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவை இக்கருவிகளை இயக்கத் தேவையான சில முக்கிய ஆற்றல் மூலங்களாகும்.
●நீர் இறைத்தல் முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன
●இந்த முறைகள் செலவு குறைந்தவை. ஆனால், இவற்றின் திறன் மிகக்குறைவு ஆகும்.
●ஏனெனில், நீர் நிலத்தில் சமமாகப் பாய்வதில்லை. அதிகளவு நீர் இழப்பையும் இவை ஏற்படுத்துகின்றன.
ஆ. நவீன முறைகள்
●பாரம்பரிய முறைகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வாக நவீன நீர்ப்பாசன முறைகள் உள்ளன.
●நிலத்தில் ஒரே அளவிலான ஈரப்பதம் காணப்பட இவை உதவுகின்றன. நவீன முறைகள் இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை:
• தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு
• சொட்டு நீர்ப் பாசன அமைப்பு
தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு
தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் மீது நீரைத் தெளிப்பதோடு சரியானநீர்பரவலுக்கும் உதவுகிறது. இது நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற முறையாகும். இதில், உந்துவிசையியக்கக் கருவி ஒன்று குழாய்களோடு இணைக்கப்படுகிறது. இது அழுத்தத்தை உருவாக்குவதால் குழாயின் நுண்துளைகளின் வழியாக நீரானது தெளிக்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்
இம்முறையில் குழாய்களைப் பயன்படுத்தி நீரானது சொட்டு சொட்டாக நிலத்தில் விடப்படுகிறது. நீர் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஒரு பயனுள்ள முறையாகக் கருதப்படுகிறது.
3. களை என்றால் என்ன? களைக் கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகளை விளக்குக
◼விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன.
◼களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும்.
◼களை நீக்கம் மிக முக்கியமான செயலாகும். ஏனெனில், களைத் தாவரங்கள் ஊட்டப் பொருள்கள், சூரியஒளி, நீர், வளரிடம் மற்றும் பிற ஆதாரங்களுக்காக பயிர்த் தாவரங்களுடன் போட்டியிடுகின்றன.
இயந்திர முறைகள்
இயந்திர முறையானது களைகளை நீக்கப்பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களைக்கொத்தியின் உதவியுடன் கைகளால் களையை அகற்றுதல் ஒரு பழமையான களையெடுத்தல் முறை ஆகும். இது களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த முறையாகும்.
உழுதல் முறைகள்
இது அனைத்து வகையான களைகளையும் அழிப்பதற்கான ஒரு செயல்முறையாகும். ஆழமாக உழுவதன் மூலம் களைகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. அல்லது ஆழ உழுதல்மூலம் சூரிய வெ ப்பத்தில் உலர்த்தப்படுகின்றன.
பயிர்ச் சுழற்சிமுறை
இந்த முறையில் பயிர் சார்ந்த மற்றும் ஒட்டுண்ணி வகைக் களைகளைக் கட்டுப்படுத்த முறையான பயிர்ச்சுழற்சி பின்பற்றப்படுகிறது.
கோடை உழவு
குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்த பிறகு, நிலத்தை ஆழமாக உழுது, களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை கோடைக்காலத்தில் சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலம், பல்வேறு ஓராண்டு மற்றும் பல ஆண்டுகள் வாழும் களைகளை அழிக்கமுடியும்.
உயிரியல் களைக் கட்டுப்பாடு
இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர்க் காரணிகள் களைகளைக்கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. களைகளைஅழித்தல்உயிரியல் கட்டுப்பாட்டின் நோக்கமாக இல்லாமல், களைத் தாவரங்களை முறைப்படுத்துதலும் குறைத்தலுமே இதன் நோக்கமாக உள்ளது.
வேதியியல் முறைகள்
வேதியியல் முறைகள் சிலவகைக்களைகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறன் மிக்கதாக உள்ளன. களைகளைக் கொல்வதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருள்கள் களைக்கொல்லிகள் எனப்படுகின்றன. இவ்வேதிப் பொருள்கள் நீருடன் கலக்கப்பட்டு பயிர்களின் மீது தெளிக்கப்படுகின்றன