வகுப்பு 7 ப1அ5 அறிவியல் தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
அலகு 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ. பிரையோபில்லம்
ஆ. பூஞ்சை
இ. வைரஸ்
ஈ. பாக்டீரியா
விடை: அ. பிரையோபில்லம்
2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ. ஸ்போர்கள்
ஆ. துண்டாதல்
இ. மகரந்தச் சேர்க்கை
ஈ. மொட்டு விடுதல்
விடை: ஈ. மொட்டு விடுதல்
3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ. வேர்
ஆ. தண்டு
இ. இலை
ஈ. மலர்
விடை: ஈ. மலர்
4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ. காற்று
ஆ. நீர்
இ. பூச்சிகள்
ஈ. மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ. மேற்கூறிய அனைத்தும்
5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ. வெற்றிலை
ஆ. மிளகு
இ. இவை இரண்டும்
ஈ. இவை இரண்டும் அல்ல
விடை: இ. இவை இரண்டும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு _______________ .
விடை: மகரந்ததாள் வட்டம்
2. _______________என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்.
விடை: சூற்பை
3. கருவுறுதலுக்குப் பின் சூல் _______________ஆக மாறுகிறது.
விடை: விதை
4. சுவாச வேர்கள் _______________தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை: அவிசினியா
5. வெங்காயம் மற்றும் பூண்டு _______________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை: தரைகீழ் தண்டு
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை: சரி
2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.
விடை: தவறு
மகரந்தத்தூள்கள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.
3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்.
விடை: சரி
4. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்.
விடை: தவறு
இஞ்சி என்பது தரை கீழ் தண்டு ஆகும்.
5. சோற்றுக்கற்றாழையில், இலைகள் நீரைச் சேமிப்பதால் அவை சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை: சரி.
IV. பொருத்துக.
V. மிகச் சுருக்கமாக விடையளி.
1. தாவரத்தில் காணப்படும் இருவகையான இனப்பெருக்க முறைகளை எழுது.
தாவரத்தில் காணப்படும் இருவகையான இனப்பெருக்க முறைகள்:
பால் இனப்பெருக்கம்
பாலிலா இனப்பெருக்கம்
2. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
மலரின் இரு முக்கியமான பாகங்கள்:
மகரந்தத்தாள் வட்டம்
சூலக வட்டம்
3. மகரந்தச் சேர்க்கை - வரையறு.
மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.
4. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
காற்று, நீர், பூச்சிகள் மற்றும் விலங்குகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் ஆககும். இவற்றை மகரந்தச் சேர்க்கையாளர்கள் என அழைக்கிறோம்.
5. கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக.
கந்தம் - சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
கிழங்கு - உருளைக்கிழங்கு
6. பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
இலையும், இலையின் பாகங்களும் ஏறு கொடிகளில் நீண்டபற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன. இவை ஏறுகொடிகள் தாங்கிகளில் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன.
7. முட்கள் என்றால் என்ன?
வறண்ட நிலங்களில் வளரும் தாவரங்களில் இலைகள், முட்களாக மாறியுள்ளன. தாவரங்களில் நீராவிப்போக்கை குறைப்பதற்கு இந்த மாற்றம் உதவுகிறது.
VI. சுருக்கமாக விடையளி.
1. இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.
2. அயல் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
ஒரு மலரிலிருந்து, மற்றொரு மலருக்கு மகரந்தத்தூளை எடுத்துச்செல்ல தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பறவைகள் உதவுகின்றன. அவை ஒரு மலரிலிருந்து வேறொரு மலருக்குச் செல்லும்போது, அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன. இதன் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இதுவே அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
3. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
சில தாவரங்களில்,இலைக்காம்பு அகன்று, இலைபோன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது, இலை செய்ய வேண்டிய ஒளிச்சேர்க்கைப் பணியை மேற்கொள்கிறது.
எ.கா: அகேஷியா ஆரிகுலிபார்மிஸ்
VII. விரிவாக விடையளி.
1. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
மகரந்தச்சேர்க்கை:
மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.
வகைகள்:
மகரந்தச் சேர்க்கை இரண்டு வகைப்படும்.
அவை தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை.
மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணிகள்:
காற்று, நீர், பூச்சிகள் மற்றும் விலங்குகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படுகின்றன.
தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் சூலகமுடியையோ அல்லது மற்றொரு மலரின் சூலகமுடியையோ அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தியாகத் தேவையில்லை.
இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது.
எ.கா:ஃபேபேஸி,சொலானேஸி குடும்பத்தைச் சார்ந்த தாவரங்கள்
அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலகமுடியைச் சென்றடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படுகின்றன.
எ.கா: ஆப்பிள், ஃபிளம்ஸ், ஸ்ட்ரா ஃபெர்ரி மற்றும் பூசணி வகைத்தாவரங்கள்
2. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக.
◎தரைமேல் தண்டு மற்றும் தரையொட்டிய தண்டின் மாற்றுருக்களில், தண்டு வரம்பற்ற வளர்ச்சி உடையது.
◎தரைகீழ்த் தண்டுகளில் தண்டானது முழுவதுமாக மண்ணில் புதைந்திருக்கும். இவை வரம்புடைய வளர்ச்சி உடையவை.
◎பொதுவாக தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால், சில தண்டுகள் தரைக்குக் கீழே வளர்கின்றன.
◎உணவைச் சேமிப்பதற்காக இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும்.
◎தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும். அவை:
மட்டநிலத் தண்டு
கந்தம்
கிழங்கு
குமிழம்
1. மட்டநிலத் தண்டு
இத்தண்டு தரைக்குக் கீழ் காணப்படும் தடித்த தண்டு ஆகும். இது கணு மற்றும் கணுவிடைகளோடு காணப்படுகின்றது. கணுவில் செதில் இலைகள் காணப்படுகின்றன. இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் வளர்கிறது. இத்தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும்.
எ.கா.: இஞ்சி, மஞ்சள்.
2. கந்தம்
இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் காணப்படும். இதன் மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாகக் காணப்படும். இது மட்ட நிலத்தண்டைவிட மிகவும் குறுகிய தண்டாகும். இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்குகின்றன.
எ.கா.: சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
3. கிழங்கு
இது கோள வடிவிலுள்ள உணவைச் சேமிக்கும் பெரிய தரை கீழ்த் தண்டாகும். இதன் தண்டில் செயலற்ற மொட்டுகள் காணப்படும். இவை கண்கள் எனப்படும். நாம், இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து, புதிய தாவரமாக வளர்கின்றன.
எ.கா.: உருளைக் கிழங்கு.
4. குமிழம்
இதன் தண்டு மிகவும் குறுகிய தட்டு போன்றது. சதைப்பற்றான இலைகளில் இது உணவைச் சேமிக்கிறது. குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன. ◎சதைப்பற்றுள்ள இலை
◎செதில் இலை
தண்டின் நுனியில் நுனி மொட்டு இருக்கும். இது எண்ணற்ற செதில் இலைகளால் மூடப்பட்டிருக்கும். குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கின்றன.
எ.கா.: பூண்டு, வெங்காயம்.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்.
1. இஞ்சி என்பது தண்டு. அது வேர் அல்ல ஏன்?
இஞ்சி தரைக்குக் கீழ் காணப்படும் தடித்த தண்டு ஆகும். இது கணு மற்றும் கணுவிடைகளோடு காணப்படுகின்றது. கணுவில் செதில் இலைகள் காணப்படுகின்றன. இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் வளர்கிறது. இத்தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும்.
இது தண்டின் பண்புகளாகும், எனவே இஞ்சி தரைக்குக்கீழ் காணப்பட்டாலும் அது தண்டு ஆகும்.
2. ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன நடைபெறும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுவதால் மகரந்தச்சேர்க்கை நடைபெறாது.
ரோஜாவும், லில்லியும் இரு வேறு இனத்தைச் சார்ந்த மலர்கள் என்பதால் மகரந்தச்சேர்க்கை நடைபெறாது.
ஒரே இனத்தைச் சார்ந்த மலரின் மகரந்தத்தூள்கள், அதே இனத்தைச் சார்ந்த மலரின் சூலகத்தை அடைந்தால் மட்டுமே மகரந்தச்சேர்க்கை நடைபெறும்.
IX. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
1. கூற்று: பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது, விதையாக மாறுகிறது.
விடை: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
2. கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும் .
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.
விடை: இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
X. படம் சார்ந்த கேள்விகள்:
i. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களைக் குறிக்கவும்.
ii. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தாவரங்களை அடையாளம் காண்க. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.